குடி உயர கோன் உயரும்.… ஆனால் நாம் ஆளத் தேர்ந்தெடுக்கும் கோமான்கள் தாங்கள்மட்டும் உயர்ந்தால் போதுமென நினைக்கிறார்கள்போல. காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த மாங்காடு சிறப்புநிலை பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ஒதுக்கிய இடத்தில் அமைச்சரொருவர் வீடுகட்டவிடாமல் தடுப்பதால் துப்புரவுத் தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊருக்கே திரும்பும் மனநிலையில் இருக்கிறார்கள்.
மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்திருக்கும் இப்பேரூராட்சி 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதி. 18 வார்டுகளைக் கொண்ட பேரூராட்சியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 குடும்பங்கள் தங்கி குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தன. இங்கு சேகரிக்கப்படும் குப்பை, திடக்கழிவு மேலாண்மை மூலம் மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது.
என்ன பிரச்சினையென துப்புரவுத் தொழிலாளி நாகராஜையே கேட்டோம். “""நாங்க ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள். எங்க பகுதில மழையில்லாததாலும், காட்டு வளம் குறைஞ்சிட்டதாலும் நிறைய பேர் தமிழகத்துக்கு வேலைதேடி வந்தோம். தனித் தனி குழுவா பிரிஞ்சு வேலை தேடினோம். கிட்டத்தட்ட 180 பேருக்கு மாங்காடு பேரூராட்சில துப்புரவுத் தொழிலாளியா ஒப்பந்த வேலை கிடைச்சுச்சு.
தங்க இடமில்லாம பழைய பேனர், பிளாஸ்டிக் பேக்குகளை வெச்சு தற்காலிகமா குடில் போட்டு குடும்பத்தோட தங்கிவந்தோம். நாங்க வேலைசெய்யுற ஹாண்டு அண்ட் ஹாண்ட் என்ற தொண்டு நிறுவனத்தார் "மாங்காடு பேரூராட்சி இடம் கொடுத்தா, நாங்க வீடு கட்டித் தர்றோம்'னாங்க. மூணு வருஷத்துக்கு முன்னாடியே இடத்தையும் தீர்மானம் போட்டுக் குடுத்துட்டாங்க. சம்பந்தப்பட்ட நிறுவனம் வீடுகட்ட கடைக்கால் போட்டது. ஆனா சில அரசியல்வாதிங்க தலையிட்டு வேலைய அப்படியே நிறுத்திட்டாங்க.
காட்டுல இருந்தப்பகூட குடிசைவீடாச்சும் இருந்துச்சு. இங்கபாருங்க பன்னிக் குடிசை மாதிரி அரசியல் பேனர்ல கட்டுன எங்க வீடுகளை. நாலுவருஷமா வீடு இல்லாத காரணத்தால 60 குடும்பம் இருந்த இடத்துல இப்ப 20 குடும்பம்தான் வாழ்கிறது''’என்றார்.
பெண் துப்புரவுத் தொழிலாளியான ஸ்வேதா, ""குறைஞ்ச சம்பளத்துக்கு இந்த பேரூராட்சில வேலைசெய்யுறோம். மழைக்காலத்துல குடிசைகளெல்லாம் தண்ணில மிதக்குது. அந்த நேரத்துல எதிரேயிருக்கிற சுடுகாட்டுலதான் சமையல், படுக்கையெல்லாம்''’என்று தங்கள் துயரத்தை விவரித்தார்.
மாங்காட்டைச் சேர்ந்த குமார், ""இவங்கமட்டும் இல்லைனா ஊரே நாறிடும். கடந்த 2015 மழைவெள்ளத்துல மூழ்கினப்ப நக்கீரன்கூட வந்து இவங்களுக்கு நிவாரணம் வழங்குச்சு. தொண்டு நிறுவனம் வீடுகட்டித் தர முன்வந்தப்ப அ.தி.மு.க.வ சேர்ந்தவங்க தடுத்தாங்க. வேற ஆட்களுக்கு இந்த இடம் சொந்தமானதுனு கட்டுமான வேலையைத் தடுத்தாங்க.
1907-ல இந்த இடத்தோட சொந்தக்காரர் ராஜரத்தினம் முதலியார் சுடுகாட்டுக்காக 6.90 ஏக்கர் நிலம் தானமா கொடுத்தார். 1952-ல மாங்காடு ஊராட்சியாகி, 1964-ல பேரூராட்சியாச்சு. முதலியார் கொடுத்த இடத்துல நடுவுல ரோடு வந்துச்சு. அதுல சுடுகாடுபோக வடக்குப்புறம் 2 கிரவுண்டுல காலி இடம் இருந்துச்சு. அந்த இடத்துல துப்புரவுத் தொழிலாளிகளுக்கு வீடுகட்ட பேரூராட்சில தீர்மானம் போட்டுதான் வேலை தொடங்குச்சு. பேரூராட்சி இ.ஓ. ரவிபாபு தடுத்து நிறுத்திட்டார். கேட்டா அமைச்சர் பெஞ்சமின கேட்டுச் செய்யுங்கறார். அமைச்சருக்கும் எங்க ஊருக்கும் என்ன சம்பந்தம்?''’’ என கேள்வியெழுப்பினார்.
இ.ஓ. ரவிபாபுவைத் தொடர்புகொண்டோம். “"எனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'’என நழுவிக்கொண்டார்.
மாங்காடு முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம்.ஆர். சீனிவாசனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ""நாங்கள் இருந்தபோதுதான் இடம் ஒதுக்கினோம். இந்த வீடு அவர்கள் தங்கி வேலைசெய்யத்தான். மற்றபடி இது அவர்களுக்கு நிரந்தரமாக சொந்தமாகாது. ஆளுங்கட்சி தலையீட்டால் வேலை நின்றுவிட்டது'' என்றார்.
அமைச்சர் பெஞ்சமினை பலமுறை முயன்றும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஒருவேளை சுத்தம் சோறுமட்டும்தான் போடும்… குடிசையெல்லாம் கட்டித்தராது என பாடம் சொல்லித்தர நினைக்கிறார்களோ அரசியல்வாதிகள்.
-அரவிந்த்